அறிமுகம்
எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல்
இத்தனை நாளாக தவித்துக் கொண்டிருந்ததால், எழுதத் தொடங்வில்லை. இன்று
வரையிலுமே அது தெரியவில்லை, இருப்பினும்
இப்போது எழுதாவிட்டால் உள்ளிருக்கும் தீ நமர்த்துப் போய்விடும் என்பதால்
ஆரம்பித்துவிட்டேன். நம் அனைவரிலும்
மூன்று வகை ஆட்கள் உண்டு. முதல் வகை, ஆத்திகர்கள், இரண்டாம் வகை நாத்திகர்கள், மூன்றாம் வகை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப கொள்கையை மாற்றிக் கொள்பவர்கள். நான் மூன்றாம் வகையைச் சேர்ந்தவன்தான். எனக்கு நல்லது நடக்கும்போது கடவுளை புகழ்தலும்
கெட்டது நடக்கும்போது இல்லையென தூற்றுதலும் என அரைவேக்காடு 'genre' நான். சில நாட்கள் முன் நிரம்ப சிந்தித்ததன் பேரில்
என் ஆன்மிக வழிநடக்கும் நண்பனிடம் சில முறை வழக்காடுகளில் ஈடுபட்டு, அவன் தந்த சில ஆன்மிக புத்தகங்களில் சில
நாட்கள் லயிக்க, எனக்கு மிகப்பெரும்
தீர்க்கமான குழப்பம் ஒன்று உருவானது. அந்தக் குழப்பம்தான் ஆன்மிகத்தில் நாம் சரியான பாதையில் சென்று
கொண்டிருக்கிறோம் என்பதற்கு சாட்சி என்று சிலர் கூறுகின்றனர். கடவுள் என்பவர்(என்பது) இருக்கிறாரா என்ற
கேள்விக்கு பதில் தரும் அல்லது தரமுடியாத எண்ண ஓட்டங்கள் மனித வாழ்வின்
இறுதிக்குள் நாம் சந்திக்கக் கூடிய, சந்திக்க வேண்டியவை. என்றாவது
நீண்ட நேரம் ஒரே இடத்தில் கடவுளைப் பற்றி சிந்தித்து சிந்தித்துத் தோற்ற பலருக்கு
அல்லது வெற்றி கண்ட வெகுசிலருக்கு நான் மேலே சொன்னது புரியும். இப்படியாக நான் திரிந்த நிலையில் எனக்கு மிகப்
பிடித்த சுஜாதா அவர்களே கடவுள்பற்றி ஒரு கட்டுரை எழுதி இருப்பது வெகு
நாட்களுக்குப் பின் நினைவு வந்தது. உடனே
எடுத்துப் படிக்கலானேன். படிப்பதற்கு
முன் இந்த புத்தகத்தை எனக்கு முன்னேயே படித்திருந்த என் நண்பன் 'சிவா' கூறியது ஞாபகம் வந்தது.
"'கடவுள் இருக்கிறாரா' புக்
படிச்சியா மச்சி, என்ன சொல்ல
வர்றார்னே சத்தியமாப் புரியல… நைட்
ஃபுல்லா படிச்சு மண்ட காஞ்சுருச்சு..!"
எனவே
இப்புத்தகத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே அவசரப்படாமல் படிக்க எத்தனித்தேன். சும்மா சொல்லக் கூடாது,
மிக கனமான தலைப்பில் தனக்கே உரிய அசாத்திய எழுத்தால் 'just like that' சொல்கிறார். அனைவரும் தேடிக் கொண்டிருக்கும் ஒரு கேள்விக்கு
பதில் அளிப்பது ஒரு வகை, பதில்
அளிக்காமல் 'இவ்வழி சென்று
பாருங்கள்..!' எனத் தேடுதலுக்கு
பலம் கொடுப்பது மற்றொரு வகை. இரண்டாம்
வகை அணுகுதலை செவ்வென சுஜாதா இப்புத்தகத்தில் செய்திருக்கிறார் என்பது என் கருத்து. புத்தகத்தைப் படித்ததில் இருந்து என் தேடுதலும்
பலப்பட்டிருக்கிறது. புத்தகத்தின்
ஆரம்பம் முதல் இறுதிவரை "அறிவியலின்
பார்வையில் எதற்கும் ப்ரூஃப் தேவைப்படுமானால் கடவுள் இல்லை என்பதிலும்
ஆன்மிகத்தின் நோக்குதலில் கடவுள் என்பது யாராலும் கண்டுகொள்ளவோ வரையறுக்கவோ
முடியாது அப்படிச் செய்துவிட்டால் அது கடவுளே அல்ல என்பதிலும்" தீர்க்கமாக இருந்திருக்கிறார். இப்புத்தகத்தை முடிக்கும்போதும் அவர் இப்படி
முடிக்கிறார்.
" எனவே கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு அறிவியலின் பதில் - "இருக்கலாம்.",
ஆன்மிகத்தின் பதில் - "இருக்கிறார்."
என்
பதில் it depends !"
என்று
முடித்திருக்கிறார். படித்தால்
நமக்கும் அந்த மனநிலைதான் ஏற்படும். இப்புத்தகத்தில் நிறைய அறிவியல் கோட்பாடுகளையும்,
கணித தேற்றங்களையும் அலசி, கதைகளையும் ஜோக்குகளையும் ஆங்காங்கே தெளித்து, அருமையாக விளக்கம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் நாம் படித்துக் கொண்டிருப்பது ஒரு 'உப்புசப்பில்லாத மேட்டர்' என்று நாம் நினைத்துவிடக் கூடாது என்பதால்
நம்மைக் கட்டிப்போட நிறைய கதைகளையும் சம்பவங்களையும் மேற்கோள் காட்டியுள்ளார்.
இப்புத்தகம் படிப்பவர் 'கடவுளின்பால் தீவிர காதல் கொண்டவர்' எனில் அவர் உணர்ச்சிவசப் படவோ, அதே நேரம் 'நாத்திகர்' எனில்
மூளைச்சலவை செய்து ஆன்மிகத்தின் உள்ளிழுக்கக் கடவதோ அல்ல.
இப்புத்தகம் ஒரு 'neutral object'. எவரும், நல்ல சுத்தமான ஓய்வு நேரத்தில் ஈசி சேரில்
ஹாயாகப் படுத்துக்கொண்டு அருகில் ஒரு 'lemonade' வைத்து சிப் செய்துகொண்டே படிக்கலாம். அவ்வளவு அருமையாக இருக்கிறது. இதே போன்ற 'smoothness'-ஐ தான் இத்தொடரில் நானும் கொடுக்க விளைகிறேன். அத்தியாயங்களை ஒன்று சேர்த்தும் அவர் கூறிய கதைகளை அப்படியே இட்டும் (சுட்டும்) இத்தொடரை தள்ளலாமென முடிவு செய்திருக்கிறேன். 'ஆல்ரெடி கடவுள் பத்தி அலசியாச்சு, நீ ஒண்ணும் சொல்ல வேணாம்' என்று
நினைப்பவர்கள் இத்தொடரைப் படிக்க வேண்டாம். (நா ஒருத்தன்.. இந்த ப்லாக்
தெரிஞ்சதே ரெண்டு மூணு பேர்தான். இதுல
ஏதோ 1000 பேர் படிக்கிறமாரி
அறிக்கைலா விட்டுட்டுருக்கேன்..!) இத்தொடரை
ஆரம்பிக்கும்போதே இதன் முதல் அத்தியாய அலசலையும் வாசகராகிய நீங்கள்
படிக்கவேண்டுமென்று ஆசையுற்றேன். எனவே
இப்புத்தகத்தை அறிமுகம் செய்யும் இதே நாளில் இதன் முதல் அத்தியாயத்தின் பதிவையும்
உங்களுக்கு விருந்தாக்குகிறேன்.
பின்குறிப்பு: எழுதுவதற்கு முன் இப்புத்தகத்தைப் பற்றி வேறு யாரேனும் எழுதியுள்ளனரா என்று பார்த்தேன். ஒருவர் எழுதியிருக்கிறார். என்னைவிட நன்றாகவே எழுதியுள்ளார். ஆனால் அவருடைய ப்லாக் பற்றி நான் சொல்ல மாட்டேன். நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். அவர் இப்புத்தகத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதியதோடு நிறுத்திக் கொண்டார். ஆனால் என்னது பதிவுகள் நீள ஒரு தொடராய் வரும். உங்களைத் துன்புறுத்தும். ஹீ.... ஹீ.... ஹீ....!
ரெஸ்ட் எடுங்க..!



No comments:
Post a Comment