Sunday, 28 September 2014

கடவுள் இருக்கிறாரா..? - சுஜாதா (பாகம் - 2)

முதல் அத்தியாய சுருக்கம்


இதற்கு முன் எழுதிய பதிவைப் படித்தவர் மட்டும் இப்பதிவைத் தொடர்ந்து படிக்கவும். இதன் அறிமுகப் பதிவு இதோ.

முதலிலேயே சொல்லி விடுகிறேன். இப்புத்தகத்தைப் படித்தவர்கள் அப்படியே 'ஜகாம்' வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் சத்தியமாக சுஜாதா அளவிற்கு என்னால் எழுத முடியாது. 'இல்ல.. நான் படிப்பேன்.. உன் லட்சணம் என்னன்னு பாக்கணும்..' என்றால் உங்கள் தலையெழுத்து. இத்தொடரில் உங்கள் மனம் புண்படும்படியாக எதுவும் இருந்தால் மன்னிக்கவும். ஏனெனில் புத்தகத்தில் இருப்பதைத்தான் படித்துவிட்டுப் பகிர்கிறேன். பிழைகள் இருந்தால் அனைத்திற்கும் நான் பொறுப்பு. பாராட்டுக்கள், சுவாரசியங்கள் இருந்தால் அனைத்திற்கும் அவரும்(கடவுளும்) அவரும்(சுஜாதாவும்) பொறுப்பு. ஓகே.. லெட்ஸ் ஸ்டார்ட்.  


சுஜாதா கடவுளைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும்போதே, தன்னிடம் கடவுளின் இருப்புத்தன்மையைப் பற்றிக் கேட்டால் 'பைனரி'யாக சொல்ல முடிவதில்லை என்று கூறுகிறார். கடவுளின் இருப்பை அறிவியலின் வழி நம்முடன் பகிரவும் அதன்மூலம் அவரும் புரிந்துகொள்ளவும் விளைகிறார்.

அதற்கு முன் இக்கட்டுரையை எழுதுவதற்கு இருபது வருடங்களுக்கு முன் அவர் எழுதிய 'தேவன் வருகை' என்ற விஞ்ஞான சிறுகதை பற்றி சொல்கிறார். அதில் கடவுள் 'ஒவ்வொரு ஊரிலும் ஒரு பொது இடத்தில் காட்சி தருகிறேன். அதற்கான தருணம் வந்துவிட்டது' என்று உலகெங்கும் அறிவித்து விடுவார். இதை அரசாங்கம் ஏதோ புரளி என்று மறுக்கும். இருந்தும் ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவரும் தங்கள் கடவுள்தான் வரப்போகிறார் என்று எதிர்பார்த்து குறிப்பிட்ட தினத்தன்று அதிகாலை மைதானங்களில் போய் பரபரப்புடன் காத்திருப்பர். அந்தக் கதையின் கடைசிப் 'பாரா' இதுதான்.

'சூரிய உதயம் ஐந்து ஐம்பத்தெட்டுக்கு...

மணி ஐந்து ஐம்பத்தேழு. ஆரவாரம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி மௌனம். மிக மிக மௌனம். தூரத்தில் மெதுவாக சோலையை அலைக்கும் காற்று கேட்டது. உறங்கி எழுந்த பட்சிகளின் உற்சாகக் குரல்கள் கேட்டன. எல்லாரும் எதிரே தனியாக அமைக்கப் பட்டிருந்த அந்த காலியிடத்தை எதிர்நோக்கியிருந்தார்கள்.
ஐந்து ஐம்பத்தெட்டு

          ஆறு மணிக்கு அவர்கள் வீடு திரும்பினார்கள்'

- என முடித்திருந்தார்.
இதற்கு பலர் அவரிடம் திட்டியும் கோபப்பட்டும் எழுதினார்களாம். ஆனால் அந்த கதையில் அவர் சொல்ல விரும்பியது கடவுள் அப்படி வந்திருந்தால், அவரை தன்னைப் போல் அற்ப ஜந்துவால் வர்ணிக்க முடிந்திருந்தால் அவர் கடவுலே அல்ல என்பதே. இப்படியாக நம்மாழ்வாரின் வெண்பா ஒன்றையும் அதில் மேற்கோள் காட்டியுள்ளார்.

கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு, குப்புசாமி இருக்கிறாரா என்பதைப் போல உடனடியாக பதிலளிக்க முடியாது. அவர் இருக்கிறாரா என அவர் வீட்டிலோ ஆபீசிலோ பார்த்து கன்ஃபர்ம் செய்துகொள்ள முடியும். கடவுளை நேரில் பார்த்தவர் இதுவரை இல்லை. அப்படிப் பார்த்தவரும் சொப்பணத்தில் தான் தரிசித்திருக்கிறார்கள். இவர்களின் கடவுள் அனுபவத்தை மற்றவர் பங்குபோட முடியாத வரை இவர்கள் சொல்வதைப் பெரிதுபடுத்த முடியாது.

கடவுளை நேரில் பார்த்துத்தான் ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை என்கிறார்கள் ஆத்திகர்கள். ஏழையின் சிரிப்பு, குழந்தையின் புன்னகை என்றெல்லாம் தேடச் சொல்கிறார்கள். நாம் யாரும் கிளிண்டனைப் பார்த்ததில்லை(அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியை சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். உங்களுக்கு வேண்டுமானால் 'ஒபாமா' வை வைத்துக் கொள்ளுங்கள்). இருந்தாலும் அவர் இருக்கிறார் என்பதை நம்புகிறோம். நேரடியாக பார்க்காவிட்டாலும் அவர் செய்யும் காரியங்களின் விளைவுகளை சந்திக்கிறோம். அதேபோல கடவுளின் செயல்களை வைத்து கடவுளின் இருப்பை நம்பலாமென ஆத்திகர்கள் கூறுவதை தவறு என்கிறார்.

ஏனெனில் ஒபாமா(கிளிண்டன்) இருக்கிறார் என்பதை எப்போது வேண்டுமானாலும் வெள்ளை மாளிகை சென்று தொட்டுப்பார்க்க முடியும். என்ன, கொஞ்சம் துட்டு செல்வாகும். ஆனால் கடவுள்.?

அறிவியலுக்கு இயற்கையை விளக்குவதற்கு கடவுள் தேவைப்பட்டால் அவரை நம்பலாம். ஆனால் அறிவியலுக்கு கடவுள் தேவைதானா? இப்பிரபஞ்சம் திடப்பொருள், சக்தி என இருவகையானது. திடப்பொருள் என்பது நாம், மரக்கட்டை, நாமக்கட்டி, நாய்க்குட்டி என்பன. அதனையும் பிளந்து உற்று நோக்கினோமானால் ப்ரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான். அதையும் பிளந்தால் க்வார்க்குகளால் அமைந்த ஹேட்ரான்கள், பெல்டான்கள். இவை திடப்பொருள்.

சக்தி என்பது ஒளிக்கதிர்கள், எக்ஸ்ரே, உஷ்ணம், ரேடியோ அலைகள் போன்றவை. அவையும் நான்கு விசையால் ஆனது என உணர்த்தியாயிற்று. அவை அணுக்கருவுக்குள் உள்ள வலுவான விசை, வெளியே உள்ள லேசான ஈர்ப்பு விசை, மின்காந்த விளைவு, புவிஈர்ப்பு. அறிவியல் சக்தி, திடப்பொருள் இரண்டையும் முழுமையாக, ஒருமையாகப் பார்க்கிறது. இறுதியாக அது "பிரபஞ்சத்தின் உண்மை" என்று சொல்வது கீழவரும் இரண்டு விஷயங்களைத்தான். (கொஞ்சம் தெளிவா நிரைய முறைகூட படிங்க.. கொஞ்சம் புரியறது கஷ்டம்..)

1. பௌதிக இயற்பியல் விதிகள். ஆதாரமாக இந்த விதிகளின்படித்தான் பிரபஞ்சத்தின் அத்தனை திடப் பொருள்களும் சக்தி வடிவங்களும் இயங்குகின்றன. இந்த விதிகளை அவர்கள் கணித சமன்பாடுகளாக் விவரிக்கிறார்கள்.

2. இந்த விதிகள் செயல்படத் துவங்கியபோது இருந்த ஆரம்ப நிலை, 'இனிஷியல் கண்டிஷன்' என்கிறார்கள், அதை வர்ணித்துவிட்டால் அதற்கு அடுத்த நிலையை, விதிகளைப் பயன்படுத்திச் சொல்லிவிட முடியும். அதற்கு அடுத்த நிலை, இப்படி இன்றைய தினம் வரை எல்லாவற்றையும் விளக்கிவிடலாம்.

புரியாவிட்டால் மறுபடியும் படிக்கவும். ப்ளீஸ்…!

சில அறிஞர்கள் ஆரம்பநிலை அறிவியலுக்கு தேவையில்லை என்றாலும் ஸ்டீபன் ஹாக்கிங் போன்றவர்கள் அறிவியல் ஆரம்பநிலையையும் விளக்க முற்பட வேண்டும் என்கின்றனர். சென்ற நூற்றாண்டு வரை இயற்கையின் நிகழ்வுகள் அனைத்தும் கடவுள் செயல். அவைகளை அறிவியல் விளக்கத் தேவையில்லை என்று எதிர்த்தனர். ஆனால் அதை உடைக்க அறிவியலாளர்கள் அதிலும் உள்ளே புகுந்தார்கள்.



பிரபஞ்சம் ஏன் இப்படி இருக்கிறது என்பதற்கு 'நேற்று இப்படி இருந்தது; அதனால் இன்று இப்படி இருக்கிறது' என்கிற எளிதான பதிலை ஏற்க மறுத்தனர்.

இந்த ஆரம்ப நிலையையும் விதிகளையும் உற்று நோக்கும்போது ஒரு தேர்ந்தெடுப்பும் ஒழுங்கும் ('selection and discipline in the structure of the universe') இருக்கிறது. எத்தனையோ விதத்தில் பிரபஞ்சம் ஆரம்பித்திருக்கலாம், எத்தனையோ விதத்தில் இதன் விதிகளும் அமையலாம்(there are lot of possibilities for the rise of universe and there is lot of combinations to obtain different laws in it). ஏன் 'இந்த' ஆரம்பமும் விதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன? இவை இப்படி இல்லாமல் இருந்திருந்தால்? இவைகளுக்கு பதில் கிடைத்துவிட்டால் இரண்டின் வித்தியாசத்தின் நடுவில் கடவுள் கிடைத்துவிடுவார் என்று எதிர்பார்க்கலாம். உதாரணமாக, ப்ரோட்டான், நியூட்ரான்கள் இடையே உள்ள எடை வித்தியாசம், இரண்டு எலக்ட்ரான்களின் எடைக்கு சமம். இது இப்படியில்லாமல் வேறு விதமாக அமைந்திருந்தால் இன்று நாம் காணும் உயிர்கள் வந்திருக்குமா? முடியாது.



அதேபோல ப்ரோட்டானின் ஈர்ப்பு எடை(gravitational mass) என்று ஒரு விஷயம் இருக்கிறது. இது சற்று வேறாக இருந்திருந்தால் காலக்ஸியே இல்லை. நட்சத்திரம், சூரியன், பூமி, உயிர், பரிணாமம், மனிதன் என எதுவுமே இல்லை. பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் அதன் விரிவு வேகம் சற்று குறைவாகவே இருந்திருந்தால் அது தனக்குள்ளே மடிந்து போயிருக்கும். சற்று அதிகமாக இருந்திருந்தால் நட்சத்திரம் உருவாயிருக்க முடியாது. அப்படியில்லாமல் அருமையான இந்த வேகம் மற்றும் விதிகள் எல்லாவற்றிற்கும் ஏன் இப்படி ஒரு தனித்தன்மை? என்பதுதான் அறிவையலாளர்களின் கேள்வி.

(இங்கும் கொஞ்சம் கவனமாக வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...)

அந்த்ராபிக் (Anthoropic) தத்துவம் என்று ஒன்று இருக்கிறது. இதன்படி விதிகள் , ஆரம்ப நிலைகள் எல்லாமே கடைசியில் மனிதன் தோன்றி இந்தக் கேள்வியைக் கேட்பதற்காகத்தான் ஏற்பட்டவை என்கிறார்கள். எத்தனையோ பிரபஞ்சம் உருவாவதற்கு எண்ணிலாத சாத்தியக்கூறுகள் உள்ளன. அவை வேறாக அமைந்து இப்படியாக இல்லாமல் இருந்திருந்தால் புத்திசாலி மனிதன் தோன்றியிருக்க மாட்டான் என்கிறார்கள்.
என்ன கேள்வி: பிரபஞ்சம் ஏன் இப்படி இருக்கிறது.
இதற்கு பதில்: பிரபஞ்சம் இப்படி இல்லாவிட்டால் இந்த கேள்வியே வராது என்பதே.



ஆனால் இந்த வசீகர வாதம் பிரபஞ்சத்தில் உள்ள ஒழுங்கையும் சீரான அமைப்பையும் விளக்கினாலும் இது திருப்தி தரும் கொள்கையல்ல எனவும் இக்கூற்றுகளை தனிமையில் அமர்ந்து தன்னைப் போல் கொஞ்சமாவது தூக்கமிழந்து யோசித்தால் இச்சிந்தனைகளின் வீரியம் புரியுமென முதல் அத்தியாயத்தை முடிக்கிறார்.

பின்குறிப்பு: முதல் அத்தியாயத்தில் நம்மாழ்வார் 'பா'வையும் அதற்கு சுஜாதா எழுதிய விளக்கத்தையும் நான் தவிர்த்திருக்கிறேன். ஆனால் அது படிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். மற்றபடி ஐன்ஸ்டீன் கூறியது பற்றியும் இன்னசில வாக்கியங்களையும் அறிவியல் விதிகளையும் தவிர்த்து சுருக்க முற்பட்டேன். சில, இல்லை பல வாக்கியங்கள் அப்படியே அவர் எழுதியதை எழுதியுள்ளேன். சரி, அடுத்த பதிவில் இரண்டாம் அத்தியாயத்தில் என்ன சொல்லியிருக்கிறார் எனப் பார்ப்போம்.


ரெஸ்ட் எடுங்க…!  

கடவுள் இருக்கிறாரா..? - சுஜாதா

அறிமுகம்



                       எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் இத்தனை நாளாக தவித்துக் கொண்டிருந்ததால், எழுதத் தொடங்வில்லை. இன்று வரையிலுமே அது தெரியவில்லை, இருப்பினும் இப்போது எழுதாவிட்டால் உள்ளிருக்கும் தீ நமர்த்துப் போய்விடும் என்பதால் ஆரம்பித்துவிட்டேன். நம் அனைவரிலும் மூன்று வகை ஆட்கள் உண்டு. முதல் வகை, ஆத்திகர்கள், இரண்டாம் வகை நாத்திகர்கள், மூன்றாம் வகை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப கொள்கையை மாற்றிக் கொள்பவர்கள். நான் மூன்றாம் வகையைச் சேர்ந்தவன்தான். எனக்கு நல்லது நடக்கும்போது கடவுளை புகழ்தலும் கெட்டது நடக்கும்போது இல்லையென தூற்றுதலும் என அரைவேக்காடு 'genre'  நான். சில நாட்கள் முன் நிரம்ப சிந்தித்ததன் பேரில் என் ஆன்மிக வழிநடக்கும் நண்பனிடம் சில முறை வழக்காடுகளில் ஈடுபட்டு, அவன் தந்த சில ஆன்மிக புத்தகங்களில் சில நாட்கள் லயிக்க, எனக்கு மிகப்பெரும் தீர்க்கமான குழப்பம் ஒன்று உருவானது. அந்தக் குழப்பம்தான் ஆன்மிகத்தில் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கு சாட்சி என்று சிலர் கூறுகின்றனர். கடவுள் என்பவர்(என்பது) இருக்கிறாரா என்ற கேள்விக்கு பதில் தரும் அல்லது தரமுடியாத எண்ண ஓட்டங்கள் மனித வாழ்வின் இறுதிக்குள் நாம் சந்திக்கக் கூடிய, சந்திக்க வேண்டியவை. என்றாவது நீண்ட நேரம் ஒரே இடத்தில் கடவுளைப் பற்றி சிந்தித்து சிந்தித்துத் தோற்ற பலருக்கு அல்லது வெற்றி கண்ட வெகுசிலருக்கு நான் மேலே சொன்னது புரியும். இப்படியாக நான் திரிந்த நிலையில் எனக்கு மிகப் பிடித்த சுஜாதா அவர்களே கடவுள்பற்றி ஒரு கட்டுரை எழுதி இருப்பது வெகு நாட்களுக்குப் பின் நினைவு வந்தது. உடனே எடுத்துப் படிக்கலானேன். படிப்பதற்கு முன் இந்த புத்தகத்தை எனக்கு முன்னேயே படித்திருந்த என் நண்பன் 'சிவா' கூறியது ஞாபகம் வந்தது.

"'கடவுள் இருக்கிறாரா' புக் படிச்சியா மச்சி, என்ன சொல்ல வர்றார்னே சத்தியமாப் புரியலநைட் ஃபுல்லா படிச்சு மண்ட காஞ்சுருச்சு..!"


                          எனவே இப்புத்தகத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே அவசரப்படாமல் படிக்க எத்தனித்தேன். சும்மா சொல்லக் கூடாது, மிக கனமான தலைப்பில் தனக்கே உரிய அசாத்திய எழுத்தால் 'just like that'  சொல்கிறார். அனைவரும் தேடிக் கொண்டிருக்கும் ஒரு கேள்விக்கு பதில் அளிப்பது ஒரு வகை, பதில் அளிக்காமல் 'இவ்வழி சென்று பாருங்கள்..!' எனத் தேடுதலுக்கு பலம் கொடுப்பது மற்றொரு வகை. இரண்டாம் வகை அணுகுதலை செவ்வென சுஜாதா இப்புத்தகத்தில் செய்திருக்கிறார் என்பது என் கருத்து. புத்தகத்தைப் படித்ததில் இருந்து என் தேடுதலும் பலப்பட்டிருக்கிறது. புத்தகத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை "அறிவியலின் பார்வையில் எதற்கும் ப்ரூஃப் தேவைப்படுமானால் கடவுள் இல்லை என்பதிலும் ஆன்மிகத்தின் நோக்குதலில் கடவுள் என்பது யாராலும் கண்டுகொள்ளவோ வரையறுக்கவோ முடியாது அப்படிச் செய்துவிட்டால் அது கடவுளே அல்ல என்பதிலும்" தீர்க்கமாக இருந்திருக்கிறார். இப்புத்தகத்தை முடிக்கும்போதும் அவர் இப்படி முடிக்கிறார்.

" எனவே கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு அறிவியலின் பதில் - "இருக்கலாம்.", ஆன்மிகத்தின் பதில் - "இருக்கிறார்."

என் பதில் it depends !"

என்று முடித்திருக்கிறார். படித்தால் நமக்கும் அந்த மனநிலைதான் ஏற்படும். இப்புத்தகத்தில் நிறைய அறிவியல் கோட்பாடுகளையும், கணித தேற்றங்களையும் அலசி, கதைகளையும் ஜோக்குகளையும் ஆங்காங்கே தெளித்து, அருமையாக விளக்கம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் நாம் படித்துக் கொண்டிருப்பது ஒரு 'உப்புசப்பில்லாத மேட்டர்' என்று நாம் நினைத்துவிடக் கூடாது என்பதால் நம்மைக் கட்டிப்போட நிறைய கதைகளையும் சம்பவங்களையும் மேற்கோள் காட்டியுள்ளார்


                         இப்புத்தகம் படிப்பவர் 'கடவுளின்பால் தீவிர காதல் கொண்டவர்' எனில் அவர் உணர்ச்சிவசப் படவோ, அதே நேரம் 'நாத்திகர்' எனில் மூளைச்சலவை செய்து ஆன்மிகத்தின் உள்ளிழுக்கக் கடவதோ அல்ல. இப்புத்தகம் ஒரு 'neutral object'. எவரும், நல்ல சுத்தமான ஓய்வு நேரத்தில் ஈசி சேரில் ஹாயாகப் படுத்துக்கொண்டு அருகில் ஒரு 'lemonade' வைத்து சிப் செய்துகொண்டே படிக்கலாம்.   அவ்வளவு அருமையாக இருக்கிறது. இதே போன்ற 'smoothness'-ஐ தான் இத்தொடரில் நானும் கொடுக்க விளைகிறேன். அத்தியாயங்களை ஒன்று சேர்த்தும் அவர் கூறிய கதைகளை அப்படியே இட்டும் (சுட்டும்) இத்தொடரை தள்ளலாமென முடிவு செய்திருக்கிறேன். 'ஆல்ரெடி கடவுள் பத்தி அலசியாச்சு, நீ ஒண்ணும் சொல்ல வேணாம்' என்று நினைப்பவர்கள் இத்தொடரைப் படிக்க வேண்டாம். (நா ஒருத்தன்.. இந்த ப்லாக் தெரிஞ்சதே ரெண்டு மூணு பேர்தான். இதுல ஏதோ 1000 பேர் படிக்கிறமாரி அறிக்கைலா விட்டுட்டுருக்கேன்..!) இத்தொடரை ஆரம்பிக்கும்போதே இதன் முதல் அத்தியாய அலசலையும் வாசகராகிய நீங்கள் படிக்கவேண்டுமென்று ஆசையுற்றேன். எனவே இப்புத்தகத்தை அறிமுகம் செய்யும் இதே நாளில் இதன் முதல் அத்தியாயத்தின் பதிவையும் உங்களுக்கு விருந்தாக்குகிறேன்.

பின்குறிப்பு: எழுதுவதற்கு முன் இப்புத்தகத்தைப் பற்றி வேறு யாரேனும் எழுதியுள்ளனரா என்று பார்த்தேன். ஒருவர் எழுதியிருக்கிறார். என்னைவிட நன்றாகவே எழுதியுள்ளார். ஆனால் அவருடைய ப்லாக் பற்றி நான் சொல்ல மாட்டேன். நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். அவர் இப்புத்தகத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதியதோடு நிறுத்திக் கொண்டார். ஆனால் என்னது பதிவுகள் நீள ஒரு தொடராய் வரும். உங்களைத் துன்புறுத்தும். ஹீ.... ஹீ.... ஹீ....!

ரெஸ்ட் எடுங்க..!